பேட் பாய்ஸ் 4-ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு… ரிலீஸ் தேதி இதோ…
ஹாலிவுட் திரையுலகில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பேட் பாய்ஸ் படத்தின் 4-ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், அனைத்து மொழி படங்களையும் ரசிக்கத் தொடங்கி விட்டனர். கோலிவுட் படங்கள் மட்டுமன்றி, டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஆங்கிலப் படங்கள் ஒன்று அல்லது இரண்டு இந்தியாவில் வெளியாவதே பெரிய விஷயம். ஆனால், தற்போது ஆங்கிலத்தில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அதுமட்டுமன்றி ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தமிழ் ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர்.
அந்த வகையில் ஹாலிவுட்டில் வெளியாகி தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று பேட் பாய்ஸ். இத்திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியானது. இதில் வில் ஸ்மித் மற்றும் மார்ட்டின் லாரன்ஸ் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பிடிக்கும் கதாபாத்திரங்களில் இருவரும் நடித்திருப்பர். இத்திரைப்படம் ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏகபோக வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகமும், 2020-ம் ஆண்டு 3-ம் பாகமும் வெளியாகி ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பேட்பாய்ஸ் படத்தின் 4-ம் பாகம் உருவாகி வந்தது. இப்படத்திலும் வில் ஸ்மித் மற்றும் மார்ட்டின் லாரன்ஸ் இருவரும் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.