பரங்கிமலை பகுதியில் பழைய வாகனம் வாங்குவது போல் நாடகமாடி, பழுதுபார்க்க வந்த சொகுசு காரை டிரைவரை மிரட்டிப் பறித்துச் சென்ற வழக்கில், பாஜக மற்றும் விசிக பிரமுகர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூரில் உள்ள கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் அபிகாஷ் (21). மேடவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான BMW சொகுசு கார் ஒன்று பழுது பார்ப்பதற்காக அந்த நிறுவனத்தில் விடப்பட்டிருந்தது. இக்காரை வாடிக்கையாளர் ஒருவர் பார்க்க வேண்டும் எனக் கூறியதை அடுத்து, அபிகாஷ் காரை நங்கநல்லூர் மெட்ரோ நிலையம் அருகே கொண்டு சென்றார்.
அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் திடீரென காரை மறித்து, ஓட்டுநர் அபிகாஷைக் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு BMW காரை ஓட்டிச் சென்றனர். இதுகுறித்து அபிகாஷ் அளித்த புகாரின்பேரில், பரங்கிமலை காவல் துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் உதவி ஆணையர் பசுபதி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

பிடிபட்ட குற்றவாளிகள்
விசாரணையில், மாங்காடு காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பழைய கார் வியாபாரி கார்த்திக் (42) என்பவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. கைதான மற்றவர்கள் விவரம்,
- சங்கர் (51): நந்தம்பாக்கம் 158-வது வார்டு விசிக தலைவர்.
- பிரசாத் (40): பரங்கிமலை ஆலந்தூர் மண்டல பாஜக தலைவர்.
- ராமச்சந்திரன் (38): 158-வது வார்டு விசிக துணைச் செயலாளர்.

பணத் தகராறே காரணம் – போலீஸ் விசாரணை
காவல்துறையினரின் விசாரணையில், கார் உரிமையாளர் சக்திவேல், பழைய கார் வியாபாரியான கார்த்திக்கிற்கு ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டியிருந்ததும், பலமுறை கேட்டும் தராததால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது அரசியல் கட்சி நண்பர்களின் உதவியுடன் இத்திட்டத்தைத் தீட்டியதும் தெரியவந்தது. வாடிக்கையாளர் போல் நடித்து காரை வரவழைத்து, டிரைவரை மிரட்டி காரைக் கடத்திச் சென்றதாகக் கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடவடிக்கை
தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்த பரங்கிமலை காவல்துறையினர், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட BMW சொகுசு கார் உள்ளிட்ட 2 கார்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
