சென்னை நொளம்பூர் ஏ.ஆர்.டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கையில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் நகைகளை பறிமுதல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை நொளம்பூர் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஏ.ஆர்.டி ஜூவல்லரி குழுமம் மால், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீட்டை ஈர்த்து வந்தது. இதனிடையே வாக்குறுதிகள் அளித்தப் படி நடந்துக் கொள்ளவில்லை, வட்டி தரவில்லை என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஏஆர்டி குழுமத்தை நடத்தி வந்த இயக்குனர்களின் வீடுகள், கடைகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏப்ரல் 6ம் தேதி சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்று மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனையின் இறுதியில் ஏஆர்டி குழுமத்தில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சோதனையின் போது அப்பகுதி பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.