போக்சோ வழக்கில்,2 ஆண்டுகளாக, தேடப்பட்டு வந்த, தஞ்சாவூரை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது.
2024 ஆம் ஆண்டு, சிறுமி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்து, போச்சோ வழக்கில் சிக்கி, தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தவர், சென்னையில் இருந்து, சார்ஜா வழியாக, சவுதி அரேபியாவுக்கு, தப்பிச்செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தஞ்சாவூரை சேர்ந்தவர் இப்ராஹிம் பக்கீர் முகமது (45). இவர் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு, சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசார் இடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்க, திட்டமிட்டுள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இப்ராஹிம் பக்கீர் முகமதுவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்ததால் அவர் மீது அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், எல்.ஓ.சி யும் போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், சென்னையில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து பயணிகளை விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் சார்ஜா வழியாக, சவுதி அரேபியாவுக்கு தப்பிச் செல்வதற்காக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வரும் போக்சோ வழக்கு தலைமறைவு குற்றவாளியான இப்ராஹிம் பக்கீர் முகமதுவும் பயணம் செய்ய இருந்தாா். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், இவர் தஞ்சாவூர் போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமுறை குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், இப்ராஹிம் பக்கீர் முகமதுவை சுற்றிவளைத்தனர். பின்னர், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதோடு இப்ராஹிம் பக்கீர் முகமது விமான பயணத்தையும் ரத்து செய்த அதிகாரிகள் தேடப்படும் தலைமறை குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார் என்ற தகவலை தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து தஞ்சாவூரில் இருந்து தனிப்படை போலீசார், நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்து, இப்ராஹிம் பக்கீர் முகமதுவை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர் போலீசாரால் தேடப்பட்டு வந்த, போக்சோ வழக்கு தலைமறைவு குற்றவாளி, சவுதி அரேபியா நாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…
