ராஜஸ்தான் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் லாவண்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, கடந்த 23ம் தேதியன்று காணாமல் போனதாக சிறுமியின் தாத்தா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். மேலும், 3 நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் தனது பேத்தியை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் விசாரணையை தொடங்கிய போலீஸார் சிறுமியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் கிராமத்தின் மைய பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.


மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராம்கார் சேத்தன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் அடிப்படையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் முதன்மை குற்றவாளியான 15 வயது சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கூட்டாளிகளான சமீர்(19) மற்றும் குலாம் (19) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்த 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், அக்கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
