கொலைக்கு ரூட்டு போட்டுக்கொடுத்த தாய்மாமன் கைது
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தூர் செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 29. இவர் வாடகை கார் ஓட்டுனர். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமழிசையை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணனுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வழக்கம்போல் அவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி கொண்டிருக்கும் பொழுது திடீரென்று வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் சுரேஷ்குமாரை கத்தியால் தலை, கழுத்து, தோல் பகுதி, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி மர்ம நபர்களை தடுத்த போது அவர்கள் விஜயலட்சுமி கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் தலை, கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ்குமார் உயிரிழந்தார். காயமடைந்த விஜயலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்தியா உள்ளிட்ட கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த திருமழிசை காவல்சேரி பகுதியை சேர்ந்த விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்தியா வயது 38 மற்றும் கொலைக்கு ரூட்டு போட்டு கொடுத்த திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியை சேர்ந்த தாய்மாமன் சிவராமன் வயது 50 ஆகியோரை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் சத்யாவிற்கும் விஜயலட்சுமிக்கும் கடந்த 2014 ஆண்டு இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 8 மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது யாரிடமும் சொல்லாமல் கோபித்துக் கொண்டு விஜயலட்சுமி ஒன்றரை மாதம் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து சத்தியா மனைவி விஜயலட்சுமி காணவில்லை என்று வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் விஜயலட்சுமி போலீசாரிடம் எனது கணவன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகிறார் என்று புகார் அளித்தது மட்டுமின்றி பொன்னேரி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்திருந்தார்.
இதற்கு இடையில் குடும்ப நல நீதிமன்றம் இருவரையும் சமாதானம் செய்து சேர்ந்து வாழ அறிவுரை சொல்லி இருவரையும் சேர்த்து விட்டனர். மீண்டும் ஒரு வாரம் கழித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு குழந்தையுடன் விஜயலட்சுமி வெளியேறி சென்றுள்ளார்.
சத்தியா பெரியவர்களை அழைத்து 3 மாதங்களுக்கு முன்னர் விஜயலட்சுமியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி வேண்டியுள்ளார். ஆனால் இவரது மனைவி கள்ளத் தொடர்பில் இருந்த உறவினரான சுரேஷ்குமார் என்பவருடன் பொத்தூர் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற சத்தியா மீண்டும் விஜயலட்சுமி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மீண்டும் ஒரு வார காலம் சத்தியாவுடன் இருந்துவிட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த சத்தியா விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சத்தியா எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டார். கடந்த 5ம் தேதி சத்யா தனது தாய் மாமன் சிவராமன் உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அப்போது சிவராமன் மற்றும் சிவராமனின் அண்ணன் மகன் சரவணனிடம் நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் சத்தியா கூறியுள்ளார். இதைக் கேட்டு கோபம் அடைந்த சரவணன் விஜயலட்சுமி யாருடன் சென்றுள்ளார். எங்கு உள்ளார் என கேட்டபோது தற்போது வசித்து வரும் இருப்பிடத்தினை கூறியுள்ளார்.
திட்டம் தீட்டிய சரவணன் சுரேஷ்குமாரை எனது கூட்டாளிகளும் தீர்த்து கட்டி விடுகிறோம் உங்கள் வாழ்க்கையில் சுரேஷ்குமார் இருப்பதால் மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும் ஆகையால் அவனை தீர்த்து கட்டி விட்டால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என்று கூறியுள்ளார்.
அதன்படி கடந்த 10ம் தேதி சுரேஷ்குமார் தங்கி இருக்கும் வீட்டுக்கு சரவணனை அழைத்து சென்று சத்தியா காட்டியுள்ளார். பின்னர் சிவராமன் அறிவுரையின்படி சரவணன் மற்றும் கூட்டாளிகளை வைத்து கடந்த 28ஆம் தேதி காலை சுரேஷ்குமாரை வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள சரவணன் மற்றும் கூட்டாளிகளை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.