சங்கராபுரம் பகுதியில் அரண்மனையை இடித்ததில் 2 கிலோ கொத்தமல்லி தங்க மாலை கிடைத்ததாக கூறி கவரிங் நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் காய்கனி கடை நடத்தி வருபவர் பார்த்திபன் இவரது கடைக்கு வந்த வட மாநில நபர்கள் ஐந்து பேர் நாங்கள் நெடுஞ்சாலை துறையில் வேலை செய்து வருகின்றோம் எனவும் கடந்த மாதம் பெங்களூரில் உள்ள அரண்மனை ஒன்றை இடிப்பதற்கு சென்றபோது அங்கு இரண்டு கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன கொத்தமல்லி மாலை கிடைத்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அந்த மாலையை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் தங்களுக்கு வேண்டுமென்றால் மாலையில் இருந்து ஒரு பகுதியை வெட்டி எடுத்து சரிபார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளனர். சந்தேகமடைந்த பார்த்திபன் உடனடியாக 5 பேரிடமும் விலாசங்களை கூறுமாறு கேட்டுள்ளார்.இதில் ஐந்து பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்; மற்றொரு பெண் நிர்வாகி கைது
தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட வட மாநில இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்துள்ளனர். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பார்த்திபன் 5 பேரையும் பிடித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து பேரும் போலியாக கவரிங் மாலைகளை தயார் செய்து இதுபோன்று விற்பனையில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வடமாநிலத்தைச் சேர்ந்த வீரு, பாலு, கல்வா, சத்துவா, லட்சுமி ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்க மாலை எனக்கூறி போலியாக கவரிங் மாலை தயார் செய்து விற்பனை செய்ய வந்த வடமாநிலத்தவர்களை பொதுமக்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..