டெல்லி காவல்துறையின் இரண்டு பெண் தலைமை காவலர்கள் செய்த ஒரு மாபெரும் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த ஒன்பது மாதங்களில் காணாமல் போன 104 குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைந்த்துள்ளனர் சீமா தேவி, சுமன் ஹூடா ஆகிய பெண் போலீஸார். கடந்த மார்ச் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ‘ஆபரேஷன் மிலாப்’ திட்டத்தின் கீழ், ஹரியானா, பீகார் மற்றும் உ.பி.யின் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 104 குழந்தைகளை மீட்டுள்ளனர்.

இந்த தேடுதல் பணியில் அவர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அதில் குழந்தைகளின் புதிய புகைப்படங்கள் இல்லாது, வேற்று மொழி தெரியாதது, தெரியாத பல இடங்களுக்கு புதிய பயணம், உள்ளூர் மக்களின் உதவியைப் பெற முடியாதது என பல சிக்கல்களை சந்தித்துள்ளனர்.
இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும், இருவரும் 104 குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களை மீண்டும் தங்கள் குடும்பத்துடன் இணைத்துள்ளனர். டெல்லி காவல்துறையின் புறநகர வடக்கு மாவட்டத்தின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவில் (AHTU)சீமா, சுமன் ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகிறார்கள்.
சீமா தேவி கூறுகையில், ‘‘குழந்தைகள் பேசும் தொலைபேசி எண்கள் பலமுறை அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, சைபர் டீம் உதவியுடன் போனின் எல்லையை கண்டுபிடித்தோம்.
பவானாவில் இருந்து 13 வயது சிறுமி காணாமல் போனார். அவர் நலமாக இருப்பதாகத் தெரிவிக்க பல்வேறு செல்போன் எண்களில் இருந்து குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளார். அதனை அந்தக் குழந்தையின் சகோதரர் எங்களிடம் கூறினார். வேறு வேறு செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்ததால் அதில் ஏதோ தவறு இருப்பதாக அவர் சந்தேகம் தெரிவித்தார்.
நாங்கள் வழக்கை விசாரித்து நொய்டாவின் ஜார்ச்சா பகுதியில் அந்தச் சிறுமியைக் கண்டுபிடித்தோம். அங்கு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். உடனடியாக அவரை அங்கிருந்து மீட்டோம்’’எனத் தெரிவித்தார்.
புகைப்படத்தில் இருக்கும் உருவத்துக்கும், நேரடியாக காணும்போது இருந்த உருவத்துக்கும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
புதிய பகுதிகளில், வீடு வீடாகச் சென்று தேடுதல் நடத்துவதற்கு முன், சீமாவும் சுமனும் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டி இருந்துள்ளது.
குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பது தனக்கு மிகுந்த பெருமையையும் ஆறுதலையும் தருவதாக சூறிய சீமா, எங்களுக்கு இதைவிட கடமை எதுவும் இல்லை என்கிறார். காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல் கிடைத்தால் உடனே வீட்டை விட்டு கிளம்பி விடுவோம். சில சமயம் பல நாட்களாக எங்கள் குழந்தைகளை பார்க்க முடியாமல் போகும் நிலை ஏற்படும்.
போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பலமுறை பல கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டி இருந்தது. பலர் எங்களுக்கு உதவ தயாராக முன் வந்தபோதும் காவல்துறைக்கு உதவுவதன் மூலம் சட்ட சிக்கலில் சிக்கலாம் என்று சிலர் நினைத்து ஒதுங்கி விடுகிறார்கள்.
ரயில்வே ஸ்டேசன்களின் பிச்சைக்காரர்கள், வியாபாரிகளிடம் இருந்துகூட எங்களுக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்களைக் காண்பிக்கும் போது, தாங்கள் பார்த்ததாக பலர் தகவல் கொடுத்துள்ளனர். 13 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்த சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டு, காதல் விவகாரங்கள், போதைப்பொருள் பழக்கம், பெற்றோரின் சரியான கவனிப்பு இல்லாமை, கல்வி பற்றாக்குறை போன்ற காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்’’ என்கிறார்கள்.
சீமாவுக்கு 16 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் சில நாட்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கும் போது, என் இளைய மகன் என்னை மிகவும் மிஸ் செய்கிறான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைக்கிறார் சீமா.
‘ஆபரேஷன் மிலாப்’ மூலம், சீமாவும், சுமனும் செய்த அசாதாரனப் பணிக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’ என்கிறார் வடக்கு புறநகர் டிசிபி நிதின் வல்சன். “அவர்களின் சாதனை குழந்தை கடத்தலை எதிர்த்து நமது சமூகத்தை பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது’’ என்கிறார்.


