நெல்லை அருகே கொண்டா நகரம் கல்லூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 3-வது நாளாகத் தொடர்ந்து எரிந்து வருவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
நெல்லை மாநகர் பகுதியைச் சேர்ந்த பழனி குமார் என்பவருக்குச் சொந்தமான இந்த பேப்பர் மில்லில், மறுசுழற்சிக்காக டன் கணக்கில் பழைய காகிதங்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் மலைபோலக் குவிக்கப்பட்டு வைத்திருந்தன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதியம் 3 மணியளவில், திடீரெனக் காகிதக் குவியலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றும், தீ மளமளவென அடுத்தடுத்த பண்டல்களுக்குப் பரவியது.

தீயணைப்புத் துறை தீவிரம்:
தகவலறிந்து வந்த நெல்லை நகர், டவுன், பாளையங்கோட்டை உட்பட 5 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல வாகனங்களில் வந்து தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடிவாரத்தில் எரியும் தீயைக் கட்டுப்படுத்த காகிதக் குவியல்களைக் கிளறி தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டியுள்ளதால், தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் நீடிக்கிறது.
சாம்பல் மழையால் பரப்பரப்பு:
3-வது நாளாகத் தொடர்ந்து புகைந்து எரியும் தீயின் காரணமாக, காற்றில் பரவும் சாம்பல் துகள்கள் நெல்லை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் முழுவதும் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சீதபற்பநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடல் சீற்றம்: லெமூர் கடற்கரை மூடல் – மணலில் புதைந்த கடைகள், சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
