குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் ஊராட்சியில் இன்று (15-08-2026) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் கட்சியினர் தலையிடுவதாகக் கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊராட்சிச் செயலாளர் தண்டபாணி தலைமையில் கூட்டம் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்கள் திடீரெனப் போராட்டத்தில் குதித்தனர்.
புகைப்படத்தை ஏந்தி பொதுமக்கள் ஆவேசம்:
தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் என்பவர், தாளையம் ஊராட்சி நிர்வாகத்தில் தேவையின்றி தலையிட்டு அதிகாரம் செலுத்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை வெளிப்படுத்தும் விதமாக, மணிகண்டன் கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஊராட்சிச் செயலாளர் தண்டபாணியிடம் கேள்வி கேட்பது போன்ற புகைப்படத்தைக் கையில் ஏந்தியபடி பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஊராட்சியை நேர்மையாக நிர்வகிக்க வேண்டிய ஊராட்சிச் செயலாளர், அரசியல் நிர்வாகியின் உத்தரவுகளுக்கு இணங்கச் செயல்படுவதாகவும், இதனால் கிராம மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அடிப்படைச் சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு:
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:
“தாளையம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்துப் பலமுறை முறையிட்டும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கிராமத்தின் பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமலும், குப்பைகள் முறையாக அகற்றப்படாமலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.”
மேலும், “ஏற்கனவே இது தொடர்பான செய்திகள் வெளியாகிய நிலையில், ஊராட்சிச் செயலாளர் தண்டபாணியை மிரட்டி, ‘தன்னை யாரும் மிரட்டவில்லை’ என்று அவர் பேசுவது போன்ற வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். அரசு அலுவலர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதையும் நிர்வாகத்தில் தலையிடுவதையும் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.
கிராம சபை கூட்டம் ரத்து – காத்திருப்புப் போராட்டம்:
பொதுமக்களின் திடீர் போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும், “உயர் அதிகாரிகள் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கும் வரை கிராம சபை கூட்டத்தை நடத்த விடமாட்டோம்” எனப் பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இன்றைய கிராம சபை கூட்டம்
நடத்தப்படாமல் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊராட்சிச் செயலாளர் தண்டபாணி காவல்துறையினரின் பாதுகாப்போடு அங்கிருந்து வெளியேறினார்.
ஆனாலும் போராட்டத்தைக் கைவிடாத பொதுமக்கள், உயர் அதிகாரிகளின் வருகைக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம சபை கூட்ட நேரத்தில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
