Homeசெய்திகள்மாவட்டம்திருச்செங்கோடு: தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது நேற்று இரவு தாக்குதல் - கணவருடன் சென்று காவல்...

திருச்செங்கோடு: தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது நேற்று இரவு தாக்குதல் – கணவருடன் சென்று காவல் நிலையத்தில் புகார்!

-

- Advertisement -

திருச்செங்கோடு நகராட்சி 6-வது வார்டு தி.மு.க. பெண் நகர்மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வி மணிகண்டன் மற்றும் அவரது கணவர் மீது நேற்று இரவு குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

we-r-hiring

நேற்று இரவு நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருச்செங்கோடு நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வருபவர் தாமரைச்செல்வி மணிகண்டன். இவர் பாவடி தெரு அருகில் சொந்தமாகத் தேநீர்க்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையின் கணக்குகளை முடித்துவிட்டு, தனது கணவர் மணிகண்டனுடன் இரவு 10:30 மணியளவில் குமரேசபுரம் 2-வது தெருவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகில் இருண்ட பகுதியில் அமர்ந்திருந்த கோபி, கௌரிசங்கர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்திய நிலையில் இருந்துள்ளது. கவுன்சிலர் தாமரைச்செல்வியும் அவரது கணவரும் இதைக் கடந்து சென்றபோது, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் திடீரென எழுந்து வந்து ஒருமையில் பேசியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவரது சேலையைப் பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கணவர் தடுத்தபோது மோதல்

தனது மனைதியை மறித்துத் தகாத வார்த்தைகளால் திட்டிய கும்பலைக் கணவர் மணிகண்டன் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போதையில் இருந்த நபர் ஒருவர் கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று சக நகர்மன்ற உறுப்பினர்களுடன் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற கவுன்சிலர் தாமரைச்செல்வி மணிகண்டன், கோபி மற்றும் கௌரிசங்கர் உள்ளிட்ட 5 பேர் மீது உரிய நடவடிக்கை கோரிப் புகார் மனு அளித்தார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் கவுன்சிலர்கள் பேட்டி

காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்கர்களைச் சந்தித்த 6-வது வார்டு கவுன்சிலர் தாமரைச்செல்வி மணிகண்டன் கூறியதாவது:

“இரவு நேரத்தில் வீடு திரும்பிய எங்களை வழிமறித்துத் தகாத வார்த்தைகளால் பேசி, சேலையைப் பிடித்து இழுத்துத் தாக்கினார்கள். ‘இன்னும் கொஞ்ச நாள்தான் உங்களது பதவி, அதற்குள் உங்களை ஒழித்துவிடுவோம்’ என்றும், ‘போலீசில் புகார் கொடுத்தால் கொன்றுவிடுவோம்’ என்றும் மிரட்டினர். ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் இப்பகுதியில் பெண்கள் தனியாக நடமாட முடியாத சூழல் உள்ளது. பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

உடன் வந்த 30-வது வார்டு தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் முருகேசன் பேசுகையில், ஆட்சி எதுவாக இருந்தாலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இச்சம்பவத்தால் நகர் காவல் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொகுதிகள் மறுவரையறை: எந்த ஆதாரமும் இல்லாமல் திமுகவை விமர்சனம் செய்கிறார்கள் – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

MUST READ