எங்கு சென்றாலும் செல்ஃபி கேட்டு ரசிகர்கள் தொல்லை செய்வது வருத்தம் அளிப்பதாக நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகை நவ்யா நாயர் ‘இஷ்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்தார்.

தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகிய தீயே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து பாசக்கிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதற்கிடையில் சந்தோஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் ஜானகி ஜானே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார் நவ்யா நாயர்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் எனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கு மேலாக ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. எனக்கு நிறைய கதைகள் நிறைய படங்கள் வந்தாலும் அவற்றிலிருந்து சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க சம்மதித்து வருகிறேன். சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்கும் செயல் மிகவும் தொல்லையாக இருக்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது கூட செல்பி எடுக்க வருகிறார்கள். ஒருவர் இறந்த போது அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம் .அது ஒரு துக்க நிகழ்வு என்று கூட பாராமல் அங்கேயும் செல்ஃபி வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது” என்று நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்