பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை பிளாக்பக் மானை வேட்டையாடியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில், பிஷ்னாய் சமுதாயத்தினரின் புனித விலங்காக கருதப்படும் பிளாக்பக் மானை வேட்டையாடிய விவகாரத்தில் நடிகர் சல்மான் கானை கொல்ல, பிரபல கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு நேற்று மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை மும்மை வொர்லி போக்குவரத்து காவல் துறை கட்டுபட்டு அறை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் இந்த மிரட்டலை அனுப்பியுள்ளார். அதில் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொலை செய்யப் போவதாகவும், அவருடைய வாகனத்தை குண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மர்மநபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வொர்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.