கர்நாடக மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தில் தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3000 அடி உயர மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பின்டுகா கிராமத்தில் புகழ்பெற்ற தேவிரம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் அடி உயர மலையின் மீது அமைந்துள்ள தேவிரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது மலை உச்சியில் உள்ள தேவிரம்மனை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்கான திருவிழா தேவிரம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவை ஒட்டி பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன் பேரில் பக்தர்கள் விடிய, விடிய மலை மீது ஏறி தேவிரம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவிரம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர். பின்டுகா கிராமத்தில் இருந்து மலை உச்சிக்கு ஏறியபோது கனமழை பெய்தததால் மலை ஏறிய 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இதில் இளம்பெண் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு டோலி கட்டி மலை அடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் குவிந்தனர். நேற்று மாலை 7 மணியளவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இன்று அம்மனுக்கு உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் பம்பைக்காரர்கள் பம்பத்தை தட்ட கோவில் கதவு தானாக திறக்கும் அதிசய காட்சி நடக்கும். நாளை பல்லக்கு ஊர்வலமும், நாளை மறுநாள் தீமிதியுடன் திருவிழா நிறைவடைகிறது