இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்திருப்பது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 11 மாதங்களில் பதிவான மிக உயர்ந்த வேலையின்மை விகிதமாக இது கருதப்படுகிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 4.6 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் கிராமப்புற பொருளாதாரத்தின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், நகர்ப்புறங்களில் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 6.6 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் நகரங்களை ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. கிராமப்புற பெண்கள் மற்றும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறைவதால் மக்களின் வருமானம் பாதிக்கப்படுவதோடு, நுகர்வோர் செலவினமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) ஏப்ரல் மாதத்தில் 55 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 54.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், பணிபுரியும் மக்கள் தொகை விகிதம் (WPR) 52.2 சதவீதத்திலிருந்து 51.4 சதவீதமாக சரிந்துள்ளது. வேலை தேடி வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாததே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்நாட்டு நுகர்வு சந்தைக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
