ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த குட்டி தேவி என்ற பெண், தனது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக பானிபட்டில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, மருத்துவர்கள் தவறாக அவரது இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு குட்டி தேவியின் உடல்நிலை சீர்குலைந்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கையில், “எங்கள் நோயாளிக்கு இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வந்தவருக்கு, எந்த அடிப்படை பரிசோதனையும் இன்றி தவறாக இதய அறுவை சிகிச்சை செய்து அவரைக் கொன்றுவிட்டனர்” என வேதனையுடன் குற்றம்சாட்டினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையின் இத்தகைய பொறுப்பற்ற அலட்சியப் போக்கு அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
