நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு பேரின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மூத்த மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்?
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதி வாரத்தில் அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம்.
கடந்த ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தொடர் தொடர்பான நாடாளுமன்ற நடைமுறைகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து வருகின்றன.
மழைக்கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்படுமா, குளிர்கால கூட்டத்தொடர் அறிவிக்கப்படுமா அல்லது முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காகத் தனியாகச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
மூன்று வாரங்கள் நடைபெற வாய்ப்பு:
இந்தச் சூழலில், டிசம்பர் முதல் வாரத்தில் குளிர்கால கூட்டத்தொடரைத் தொடங்கி, ஒரே அமர்வாக மூன்று வாரங்கள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான சட்ட மசோதாக்களை எடுத்துக்கொண்டு விவாதித்து நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு முக்கியத்துவம்
இந்தக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையுடன் தொகுதி மறுவரையறையை இணைக்கும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருப்பதால், அரசியல் கட்சிகளிடையே ஆதரவு திரட்டும் பணியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக மூத்த ஒன்றிய அமைச்சர்கள் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா:
தொகுதி மறுவரையறை மசோதாவுடன், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதாவையும் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை உள்ளடக்கிய இந்தச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கவனம்:
கூட்டத்தொடரின் தேதி மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஒன்றிய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதங்கள், அதற்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் ஒன்றிய அரசின் முயற்சிகள் ஆகியவை இந்தக் குளிர்கால கூட்டத்தொடரில் அரசியல் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டத்தொடர் தொடங்குவது உறுதியானால், மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
