இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சுமார் 5 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (UNICEF) இணைந்து வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘Progress on Drinking Water, Sanitation and Hygiene in Schools 2015-2025’ என்ற அறிக்கையில், 2025-ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 24.4 கோடி குழந்தைகளுக்கு பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 5 கோடி குழந்தைகள் உள்ளனர். உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதி இல்லாத குழந்தைகளில் சுமார் 5-ல் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலை குறைந்துள்ளது. இந்த காலத்தில் சுகாதார வசதி இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டில் இன்னும் கோடிக்கணக்கான குழந்தைகள் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
1.2 கோடி குழந்தைகளுக்கு குடிநீர் வசதி இல்லை
பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் மட்டுமின்றி, குடிநீர் வசதியிலும் இடைவெளி காணப்படுகிறது. 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைகளுக்கு பள்ளிகளில் அடிப்படை குடிநீர் வசதி இல்லை என்று அறிக்கை கூறுகிறது.
அதேபோல், சுமார் 2 கோடி குழந்தைகளுக்கு பள்ளிகளில் அடிப்படை தனிநபர் சுகாதார வசதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா மற்றும் மத்திய, தெற்கு ஆசிய பகுதிகளில் போதுமான சமீபத்திய தகவல்கள் இல்லாததால் தனிநபர் சுகாதார வசதி தொடர்பான முழுமையான மதிப்பீடு செய்ய முடியவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2030 இலக்கை நோக்கி இந்தியா
பள்ளிகளில் அடிப்படை குடிநீர் வசதியை 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் இலக்கை நோக்கி முன்னேறும் 62 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் பள்ளிகளுக்கான அடிப்படை குடிநீர் வசதி ஆண்டுக்கு 4 சதவீதத்துக்கும் அதிகமான வேகத்தில் அதிகரித்துள்ளதாக WHO-UNICEF அறிக்கை தெரிவிக்கிறது.
உலக அளவிலும் நிலை கவலைக்கிடம்
2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் குடிநீர், சுகாதாரம் மற்றும் தனிநபர் சுகாதார வசதிகளை வழங்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய முன்னேற்ற வேகம் போதுமானதாக இல்லை என்று WHO-UNICEF அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2030 இலக்கை அடைய, அடிப்படை குடிநீர் வசதிக்கான முன்னேற்ற வேகம் தற்போதைய அளவை விட 4 மடங்கும், சுகாதார வசதிக்கான முன்னேற்றம் 5 மடங்கும், தனிநபர் சுகாதார வசதிக்கான முன்னேற்றம் 4 மடங்கும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், 2030-ம் ஆண்டில் உலக அளவில் 84 சதவீத பள்ளிகளுக்கு மட்டுமே அடிப்படை குடிநீர் வசதியும், 81 சதவீத பள்ளிகளுக்கு அடிப்படை சுகாதார வசதியும், 79 சதவீத பள்ளிகளுக்கு அடிப்படை தனிநபர் சுகாதார வசதியும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிப்பறை மற்றும் கைகளை கழுவுவதற்கான வசதிகள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் கல்வி சூழலுக்கும் முக்கியமானவை என்று UNICEF தெரிவித்துள்ளது.
செலுத்தப்படாத போக்குவரத்து அபராத தொகையை மின்சார கட்டணத்துடன் இணைக்க உச்ச நீதிமன்றம் யோசனை
