Homeசெய்திகள்இந்தியாவீடுகளில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி? உச்சநீதிமன்றம் அதிரடி விளக்கம் – நகைகளுக்கான ரசீது அவசியமா?

வீடுகளில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி? உச்சநீதிமன்றம் அதிரடி விளக்கம் – நகைகளுக்கான ரசீது அவசியமா?

-

- Advertisement -

வீடுகளில் தங்க நகைகளை வைத்திருக்கும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விளக்கத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. வருமான வரித்துறை சோதனையின்போது குறிப்பிட்ட அளவு தங்கம் வைத்திருந்தால் அதற்கான ரசீது தேவையில்லை என்ற பொதுவான நம்பிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

பீகார் மாநிலத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு ஊழியர் ஒருவர் மற்றும் அவரது மனைவி மீது கடந்த 2015-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பாட்னா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களிடம் உள்ள தங்கம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் இருப்பதாக அரசு ஊழியர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதாவது, திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம் என்பதால் அதற்கான ரசீதுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பாட்னா உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தங்கம் வைத்திருப்பதற்கான வரம்பு என்ன?

வருமான வரித்துறை சோதனைகளின்போது, நகைகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாக CBDT வழிகாட்டுதல்களில் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன.

  • திருமணமான பெண் – 500 கிராம் வரை.
  • திருமணமாகாத பெண் – 250 கிராம் வரை.
  • ஆண் – 100 கிராம் வரை.

இந்த அளவுகளுக்குள் உள்ள தங்க நகைகள் பொதுவாக வருமான வரித்துறை சோதனையின்போது பறிமுதல் செய்யப்படாமல் இருக்க வழிகாட்டுதல்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.

ரசீது தேவையில்லை என்று அர்த்தமல்ல!

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட அளவு தங்கம் வைத்திருப்பதற்கான பாதுகாப்பு வரம்பு என்பது அந்த நகைகளைச் சோதனையின்போது பறிமுதல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்தான் என்று விளக்கியுள்ளது.

அந்த வரம்பிற்குள் தங்கம் வைத்திருப்பதால், அதன் உரிமைக்கான ஆதாரங்களே தேவையில்லை என்று பொருள் கொள்ள முடியாது.

குறிப்பாக, ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்குகளில், தங்களிடம் உள்ள தங்கம் எவ்வாறு கிடைத்தது என்பதற்கான உரிய விளக்கத்தையும் ஆதாரங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் அளிக்க வேண்டியிருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை!

தங்க நகைகளை வாங்கும்போது அதற்கான கட்டண ரசீதுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் பரிசாகப் பெறப்படும் நகைகளின் விவரங்களையும் முடிந்தவரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

அதேபோல், பரம்பரை வழியாகக் கிடைத்த பழைய நகைகளுக்கு ரசீது இல்லாவிட்டாலும், அவை எவ்வாறு கிடைத்தன என்பது குறித்த நியாயமான விளக்கங்களையும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களையும் வைத்திருப்பது உதவியாக இருக்கும்.

இந்தத் தீர்ப்பு அனைத்து வீடுகளிலும் உள்ள தங்க நகைகளுக்கும் புதிதாக ரசீது கட்டாயம் என்று பொருளல்ல. குறிப்பாக, வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் தங்கத்தின் உரிமைக்கான ஆதாரங்கள் முக்கியத்துவம் பெறும் என்பதை இந்த விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.

முஸ்லிமாக மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!

MUST READ