இந்தியாவின் நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஒருங்கிணைந்த கட்டண இடைமுக சேவை (UPI – Unified Payments Interface) வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
எளிய மக்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சேவை, கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தையே முற்றிலும் மாற்றியமைத்து உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

13,000 மடங்கு அபார வளர்ச்சி
இச்சேவை தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அதாவது 2016-17 ஆம் நிதியாண்டில் UPI மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை வெறும் 1.8 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், தங்கு தடையற்ற சேவை மற்றும் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, 2025-26 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 24,162 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 13,000 மடங்கு அபார வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 314 லட்சம் கோடி பரிவர்த்தனை
பரிவர்த்தனை எண்ணிக்கையில் மட்டுமின்றி, பணமதிப்பிலும் UPI பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் UPI வாயிலாக ரூ. 7,000 கோடி மட்டுமே பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2025-26 ஆம் நிதியாண்டில் இது ரூ. 314 லட்சம் கோடியாகப் பிரம்மாண்ட உயர்வைக் கண்டுள்ளது.
உலக நாடுகளுக்கு முன்னோடி
சிறிய காய்கறிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் UPI பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது. ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிய சாமானிய மனிதனின் கைக்குக் கொண்டு சேர்த்ததில் UPI முக்கியப் பங்கு வகித்துள்ளது. 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், உலகளவில் முன்னணி டிஜிட்டல் கட்டண முறையாக இந்திய UPI சேவை தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
