அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை
கர்நாடகாவில் அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த தகவல்களை தொடர்ந்து மாநிலத்தின் 12 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதில் பெங்களூரு நகரின் கே ஆர் புரம் தாசில்தார் அஜித் ராய் என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. சுமார் 15 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் தங்க நகைகளை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் கோலார், பாகல்கோட்டை, கொப்பள், கதக் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட அரசுத்துறை ஊழியர்கள் வீட்டில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.