ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.இந்தியாவில் தற்போது 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு வகை ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலில் உள்ளன. இவற்றை எளிமைப்படுத்தி, 5% மற்றும் 18% என இரண்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்தது. பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் அந்த குழு இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்று, மத்திய அரசு ஏன் இந்த வரி சீர்திருத்தங்களை கொண்டுவர விரும்புகிறது என்பதற்கான காரணங்களை விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து, 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்களை நீக்குவதற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் தெரிவித்தது. இதற்கான முடிவும் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

தற்போது செல்போன்கள், நெய், குடை, ஜாம், ஜூஸ் போன்ற பொருட்களுக்கு 12% வரியும், பிரிட்ஜ், ஏசி, சிறிய கார்கள் போன்றவற்றுக்கு 28% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்தால், இவ்வாறான பொருட்கள் அனைத்தும் 5% அல்லது 18% வரிக்குள் வரும். இதனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை, மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும், புகையிலை, மதுபானங்கள், சூதாட்டம் போன்ற துறைகள் தற்போது 12% மற்றும் 28% விகிதங்களில் உள்ளன. ஆனால் இவை முற்றிலும் நீக்கப்பட்டதால், பெரும்பாலான பொருட்கள் 5% அல்லது 18% வரி விகிதத்தில் அடங்கும். இதன் விளைவாக பொதுமக்களின் செலவினச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.