பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆளும் என்.டி.ஏ கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.


பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே ஜே.டி.யு – பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி 202 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆர்.ஜே.டி – காங்கிஸ் கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி 35 இடங்களும், ஆசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 101 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 92 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஜே.டி.யு 81 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 21 இடங்களிலும், ஆர்.எல்.எம் கட்சி 4 மற்றும் ஹெச்.ஏ.எம் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி 143 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அந்த கட்சி 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளன.

243 இடங்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம், 122 இடங்கள் தேவையாகும். ஆனால் ஜே.டி.யு – பாஜக கூட்டணி 200 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளதால், அசுர பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. நிதிஷ்குமார் 5வது முறையாக பீகாரின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, பாஜக – ஜேடியு தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரகோபூர் தொகுதியில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல், பாஜக துணை முதலமைச்சர் சாம்ராட் சர்மா, என்டிஏ துணை முதலமைச்சர் வேட்பாளர் விஜயகுமார் சின்கா, லாலுபிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப், காங்கிரஸ் மாநில தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் தங்கள் தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.


