புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4 க்கு விற்றக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட 13,000 பாடப் புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு விநியோகிக்க ஒரு லாரி முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள், மாணவர்களின் கைகளில் சேர வேண்டிய நிலையில், பழைய பேப்பர் கடைக்கு மாற்றப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. எடைக்கு புதிய புத்தகங்களை வாங்கிய வியாபாரி, அவற்றை உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் மோசடி அம்பலமாகியுள்ளது.
தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, பழைய பேப்பர் கடையில் இருந்து புதிய புத்தகங்களை ஏற்றி சென்ற லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது 13,000 பாடநூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த 2 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்கு விற்றது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஊழியர் மற்றும் 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பொறுப்பில் இருந்தவர்களே இந்த முறைகேட்டின் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் சம்க்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. கல்வித் திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட புத்தகங்கள் இவ்வாறு எடைக்கு கிலோ ரூ.4 என்ற விலையில் விற்கப்பட்டிருப்பது கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.3,500 கோடி நிதி நிலுவையில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ரூ.2,152 கோடி கல்வி நிதி உ.பி., மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மாற்றி விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மோசடி சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
This post was last modified on பிப்ரவரி 23, 2026 6:20 மணி 6:20 மணி