மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்வாகு குறித்து பள்ளி, கல்வி அமைச்சர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில பாஜக பள்ளி கல்வி அமைச்சர் மதன் திலாவர் ஏற்கெனவே பலமுறை அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தவர். கடந்த காலங்களில் முகலாய மன்னர் அக்பரை கொடுங்கோலன் மற்றும் ஆக்கிரமிப்பாளர் என்று பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
மேலும் பள்ளி பாடப்புத்தகங்களில் சனாதன தர்மம் சார்ந்த விஷயங்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வெளிநாட்டு கலா்சசார தாக்கங்களை முழுமையாக நீக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்தார். இத்தகைய சூழலில், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் அவர்கள் பருகும் பாலிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக அவர் தற்போது ஒரு புதிய கருத்தை முன்வைத்துள்ளார். உதய்பூரில் நேற்று நடந்த மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் மதன் திலாவர், பசுவின் பால் மற்றும் எருமைப்பாலின் தன்மைகளை ஒப்பிட்டுப் பேசினார். அப்போது, ‘பசுக்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் சுத்தமாகவும் இருப்பதைப் போல, அதன் பாலை அருந்தும் குழந்தைகளும் அறிஞர்களாகவும் புத்திசாலிகளாகவும் மாறுவார்கள்.

இதற்கு மாறாக எருமைப்பால் அருந்துபவர்கள் சோம்பேறிகளாகவும் மந்தபுத்தி உடையவர்களாகவும் மாறுவார்கள். எருமைகள் எப்போதும் சேற்றில் கிடக்க விரும்புவதால் அந்தப் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைந்து சோம்பேறித்தனம் அதிகரிக்கும். எருமைப்பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தாலும், மூளை வளர்ச்சிக்குத் தேவையான உயரிய பண்புகள் அதில் கிடையாது‘ என்றார். அமைச்சரின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தற்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


