ஆசிரியர்கள் தகுதி தேர்வு காரணமாக ( TET ) நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனா். இந்நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற புதுச்சேரி அரசு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெப்ப அலை வீசியது. இதனால் ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறைகளை ஈடு செய்ய கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 30ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டன. ஏப்ரல் 30-ம் தேதி விடுப்பை ஈடு செய்ய நாளை 15-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை 15-ம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வை, புதுச்சேரியை சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை 15-ம் தேதி விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆசிரியா்களின் கோாிக்கையை ஏற்று புதுச்சேரி அரசு, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அதற்கு பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, புதன்கிழமை கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


