மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீசை காங்கிரஸ் சமர்ப்பித்தது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும் அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளார், காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, பிரதமரை பேச வைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன்.