நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு பரபரப்பான அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா். 
டெல்லியை முடக்கும் ‘சிஜேபி’ போராட்டம்
உச்சநீதிமன்றத்தின் கருத்து ஒன்றால் அதிருப்தியடைந்து, சமூக வலைதளங்கள் மூலம் உருவான ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இளைஞர்கள், ஜென்-ஜி (Gen-Z) தலைமுறையினர் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற முக்கியப் பிரபலங்களின் ஆதரவோடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

2010–11 காலகட்டத்தில் அன்னா ஹஸாரே மற்றும் அரவிந்த் கெஜரிவால் நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தைப் போல, இந்த அமைப்பும் தேசிய அளவில் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. ஆனால், இந்த இளைஞர்களின் எழுச்சி காங்கிரஸிற்கு ஆதரவாக மாறிவிடக்கூடாது என்பதில் பாஜக அரசு கவனமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் சுட்டிக்காட்டுகிறார்.
நாடாளுமன்ற உத்திகளும் திமுக-வின் நிலையும்
கூட்டத்தொடரில் பாஜக அரசு தனது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஆயத்தமாகி வரும் வேளையில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையான மேகதாது விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் கொண்டுவரும் வெளிநடப்பு அல்லது எதிர்ப்புகளுக்கு நேரடி ஆதரவு தெரிவிக்காமல், தமிழகத்தின் தனித்துவமான பிரச்சினைகளை முன்வைத்து திமுக செயல்படத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நீட் மற்றும் மேகதாது போன்ற விவகாரங்களில் காங்கிரஸுடனான தொடர்பைக் குறைத்துக் கொண்டு, மத்திய அரசுடன் மிகக் கடுமையான மோதல் போக்கைத் தவிர்த்து ராஜதந்திர அணுகுமுறையை திமுக கையாளுவதாகவும் இக்கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்டது.
தாவேகாவின் எதிர்கால சவால்கள்
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மற்றும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கிறித்தவ, இஸ்லாமிய மற்றும் தலித் வாக்குவங்கிகளைத் தாண்டி, இதர பிற்படுத்தப்பட்ட (OBC) வாக்குகளை தக்கவைக்க வேண்டிய சவால் அவர்களுக்கு எழுந்துள்ளது. அதேவேளையில், மத்திய அரசின் எஃப்.சி.ஆர்.ஏ (FCRA) சட்டத் திருத்தங்கள், கல்வித்துறை சார்ந்த முடிவுகள் மற்றும் வந்தே மாதரம் தொடர்பான விவகாரங்களில் தாவெக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வரும் 2029 பொதுத்தேர்தலை நோக்கி நகரும் அரசியல் களம், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கிடையேயான புதிய கூட்டணிகளுக்கும் மாற்றங்களுக்கும் வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.apcnewstamil.com/news/india/dmk-mps-protest-in-parliament-over-mekedatu-and-neet-trichy-siva-reaction/210945
