ஆணிக்கால் என்பது என்ன? அதை ஒரு நிமிடத்தில் எடுப்பதாக நாட்டு மருத்துவத்தில் சொல்கிறார்களே, இது சரி வருமா?
நண்பர்களுக்குக் கோபம் வந்தால், “ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம்” என்பார்கள். ஆனால், மருத்துவம் என்று வந்துவிட்டால், அதைச் செய்துதான் ஆக வேண்டும். நிமிடத்தில் செய்ய வேண்டும் என்றில்லை. நிதானமாகக் குணப்படுத்தினால் போதும். ஃபுட் கார்ன் (Foot corn) என்பதன் தமிழ் அர்த்தம் கால் ஆணி. இவை தடிமனான தோல் திட்டுகள். தோலின் வெளிப்புற அடுக்கு மாற்றத்தால் உருவாகும். இவை சிறியது, பெரியது என்று பல வகையில் காணப்படும்.
ஃபுட் கார்ன் (Foot corn):
கால் ஆணி என்பது கார்ன் வகையில் வரும். இது சிறிதாக, ஆழமானதாக இருக்கும். பாதிக்கப்பட்ட வெளிப்பகுதி வட்டமாகவோ, கூம்பு போன்ற ஒரு மையப் பகுதியையோ கொண்டிருக்கும். இவை நிற மாற்றமும் அடைந்திருக்கும். பார்ப்பதற்கு ஆணியின் தலைப்பகுதி போல இருக்கும். பொதுவாக, கால் விரல்களின் மேற்பகுதியிலும் பக்கவாட்டிலும் கால் விரல்களுக்கு இடையேயும் இது உருவாகும்.

கேலசஸ் வகை (calluses):
அழுத்தப்புள்ளி பகுதிகளில் கேலசஸ் உருவாகும். ஆழமில்லாமல் அகலமாக இருக்கும். அழுத்தம் அதிகமாக இருப்பதால் பாதப்பகுதியில் உருவாகும்.
காரணங்கள்:
இது நீண்ட கால உராய்வு அல்லது அழுத்தத்தால் ஏற்படுகிறது. பொருத்தமற்ற காலணிகள் அணிவது, பிறவியிலேயே கால்களில் ஏற்படும் சில குறைபாடுகள் (deformities), (Hammer/Claw shaped toes), தசைகளின் அசாதாரண வளர்ச்சியால் கால் ஆணி ஏற்படலாம். இவற்றால் கால்களின் குறிப்பிட்ட பகுதிகளில் அழுத்தம் அதிகமாகி, சருமம் தடிமனாகிவிடும்.
அறிகுறிகள்:
ஆரம்பத்தில் தடிமனாகவும், கடினமாகவும் மட்டும் தென்படும். பிறகு இப்பகுதியில் வலி, சிவத்தல், கொப்புளங்கள் ஏற்படலாம்.
சிக்கல்கள்:
சிகிச்சை செய்யாவிட்டால் வலியுடன் தொற்று ஏற்பட்டு, அருகிலுள்ள எலும்பு, திசு, தசைநார் பகுதிகளைக்கூடப் பாதிக்கலாம்.
சிகிச்சைகள்:
வெதுவெதுப்பான நீரில் காலை 20 நிமிடம் வைத்து, காய்ந்துபோன சருமப்பகுதியை மெதுவாகத் துடைத்து பியூமிஸ் ஸ்டோன், எமரி போர்டு போன்றவற்றைப் பயன்படுத்தி, கடினமான பகுதியை ஸ்கிராப்பிங் மூலம் அகற்றுவார்கள். அறுவைசிகிச்சை செய்து ஆழமான பகுதியை அகற்றலாம்.
தடுப்பது எப்படி?
வெறுங்கால்களுடன் நடக்கக் கூடாது. பொருத்தமான, சரியான அளவுள்ள காலணிகளை அணிய வேண்டும். குஷன் வைத்த இன்சோல் கொண்ட ஷூக்களைப் பயன்படுத்தினால், அழுத்தத்தைக் குறைக்கும். இறுகப்பிடித்தது போன்ற ஷூ அணியக் கூடாது. சாக்ஸ் போடாமல் ஷூ மட்டும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஹை ஹீல்ஸ் கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த மாய்ஸ்சரைசர்களை மட்டும் பயன்படுத்துதல், நகங்களை வெட்டுதல், கால் பாதங்களைச் சுத்தமாகப் பராமரித்தல் ஆகியவை முக்கியமானவை.
பிற பாதிப்புகள்:
பாத வெடிப்பு (Foot crack), தோல் அழற்சி, பூஞ்சைத் தொற்றுகள், மருக்கள் (Plantar warts) போன்ற பிற பாதிப்புகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் கண்டறிவது அவசியம். நாட்டு வைத்தியமோ நவீன சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கால் ஆணி வராமல் தடுக்க வழிமுறைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் தேவையில்லை. மருத்துவரை அணுகி பாதப் பரிசோதனை மேற்க்கொண்ட பின்னரே இந்த வழிமுறைகளை பின்பற்றுவது சிறந்தது.


