பக்கவாதத்தை பற்றிய விழிப்புணர்வு பதிவு.
இன்றைய அவசர காலகட்டத்தில் பக்கவாதம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது எந்த வயதிலும் ஏற்படக்கூடிய ஒரு ஆபத்தான நிலை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பக்கவாதம் ஏற்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெறாவிட்டால் அது தீவிர பிரச்சனையாக மாறக்கூடும். இது பெரியவர்களை மட்டுமல்லாமல் இளம் வயதினருக்கும் ஏற்படும். எனவே இது தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும்.

பக்கவாதத்தின் அறிகுறிகள்
திடீரென தடுமாற்றம், நடப்பதில் சிரமம், கண்களில் பார்வை மங்குதல், முகத்தின் ஒரு பக்கம் மரத்துப்போவது, கை – கால்களில் பலவீனம், பேச்சில் சிரமம் (வார்த்தைகள் குழறுதல்), கடுமையான தலைவலி போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்.
பக்கவாதமானது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, புகைப்பிடித்தல், மதுபானம், மன அழுத்தம், உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களாலும் ஏற்படுவதுண்டு. இது தவிர குடும்ப மரபு காரணங்களாலும் சில நேரங்களில் ஏற்படக்கூடும்.
தடுக்கும் முறைகள்
பக்கவாதத்தின் அறிகுறிகள் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். சிகிச்சை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறதோ அவ்வளவு நல்லது. இது பக்கவாதத்திற்கான உடனடி நடவடிக்கையாகும். இது வெறும் நரம்பு பிடித்தது போல தான். சில நேரங்களில் சரியாகிவிடும் என்று தாமதிக்கக்கூடாது. தாமதமானால் நிரந்தர பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு. 
இது தவிர சத்தான உணவு வகைகள், தினமும் நடைப்பயிற்சி – உடற்பயிற்சி செய்தல், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, மது – புகைப்பழக்கங்களை தவிர்ப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, நிம்மதியான உறக்கம் போன்றவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.


