GLORIOSA SUPERBA என்ற தாவர பெயர் கொண்ட கண்வலிக்கிழங்கு மூலிகை வகைகளில் சிறந்த ஒன்றாகும். இந்த கண்வலிக்கிழங்கினை கலப்பைக் கிழங்கு, கார்த்திகை கிழங்கு, செங்காந்தள்மலர் என்று வேறு பெயர்களை கொண்டு அழைக்கலாம். இந்த தாவரத்தினை இந்தியாவில் வியாபார நோக்கத்திற்காக பரவலாக பயிரிடுகின்றனர்.
இந்த தாவரத்தின் பூ ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும். இதன் காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம் பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி பின் காய்களின் தோல் கருகிவிடும். அந்த சமயத்தில் தான் காய்களை பறிக்க வேண்டும். இந்த தாவரத்தின் விதைகள் மற்றும் கிழங்குகள் ஆகியவை மருத்துவத்திற்காக பெரிதும் பயன்படுகின்றன.

1. மூட்டு வலி, வாதம், தொழுநோய் போன்றவை குணமடைய கண்வலிக்கிழங்கு பயன்படுகிறது.
2. பால்வினை நோய், பேதி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்தாக விளங்குகிறது.
3. பெண்களுக்கு பிரசவ வலியை தூண்டவும், சக்தி தரும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.
4. தலையில் இருக்கும் பேன்களை ஒழிக்கவும் இது பயன்படுகிறது.
5. இந்த கண்வலிக்கிழங்கினால் பாம்பு கடி விஷம், தேள் கொட்டு விஷம் தலைவலி, கழுத்து வலி, வயிற்று வலி முதலியவை நீங்கும்.
பயன்படுத்தும் முறை:
1. கண்வலி கிழங்குடன் கருஞ்சீரகம் , அரிசி, காட்டுச் சீரகம், கஸ்தூரி மஞ்சள், கிளியுரம்பட்டை, கௌலா, சந்தனத்தூள் போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து சொறி சிரங்கு, படை இருக்கும் பகுதிகளில் தேய்த்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
2. இந்தக் கிழங்கினை பாதி அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேப்பெண்ணையில் போட்டு சிறு தீயில் எரித்து கிழங்கு வில்லைகள் மிதந்து வரும் வேளையில் குளிரவிட்டு பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் சமயங்களில் இதனை தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.
இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எவ்வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.