உத்தாமணி மூலிகையானது கசப்பு சுவையும், காரப் பண்புகளும் கொண்டது. இந்த உத்தாமணி இரைப்பு, இருமல், வீக்கம், நடுக்கம் முதலியவற்றை சரி செய்யும்.
உத்தாமணி இலை சாறு மூக்கடைப்பை சரி செய்யும். மேலும் இவை கருப்பைக்கான சத்து மருந்தாகவும் பயன்படுகிறது.

உத்தாமணி இலை சாறு கபத்தையும் வாந்தியையும் வெளியில் கொண்டு வரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இம்மூலிகை ரத்த போக்கினை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் செரிமான கோளாறுகளுக்கு இந்த உத்தாமணி இலைகள் மூன்றையும் கழுவி எடுத்துக் கொண்டு, 100 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு 25 மில்லி லிட்டர் அளவாக வரும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சிறிதளவு வசம்பு எடுத்து அதனை சுட்டு கரியாக்கி இரண்டு அரிசி எடை அளவிலான கரியை எடுத்து இந்த 25 மில்லி லிட்டர் உத்தாமணி நீருடன் சேர்த்து கலக்க வேண்டும். இதனை மாந்தம், செரிமான கோளாறு இருக்கும் சமயங்களில் காலை, மாலை என இரண்டு வேளைகள் குழந்தைகளுக்கு ஐந்து மில்லி லிட்டர் அளவில் கொடுத்து வரலாம்.
உத்தாமணி சாற்று இலையுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வீக்கம் உள்ள இடங்களில் பற்று போல தடவலாம்.
உத்தாமணி இலை சாறு எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு மூட்டு வலி இருக்கும் சமயத்தில் மேல் பூச்சாக தடவி வந்தால் மூட்டு வலி கட்டுப்படும்.
ஆஸ்துமா, தலைவலி போன்றவைகளுக்காக தயாரிக்கப்படும் மருந்து வகைகளில் உத்தாமணியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.