spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்என்.எல்.சியை கண்டித்து நாளை பாமக முழு அடைப்பு போராட்டம்

என்.எல்.சியை கண்டித்து நாளை பாமக முழு அடைப்பு போராட்டம்

-

- Advertisement -

என்.எல்.சியை கண்டித்து நாளை பாமக முழு அடைப்பு போராட்டம்

என்.எல்.சியின் நிலப்பறிப்பு உழவர்களுக்கு எதிரான போரான முழு அடைப்புக்கு உழவர்கள்,வணிகர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

NLC India Limited achieved highest ever total Power Generation & Coal  Production for 21-22

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு உழவர்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவு மனநிறைவு அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

we-r-hiring

வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் உழவர்களின் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்து சமன்படுத்துவதற்காக என்.எல்.சி மேற்கொண்ட அத்துமீறல்களும், அதற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளும் தேவையற்றவை. என்.எல்.சியும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அச்சுறுத்துவதற்காகவே என்.எல்.சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்றைய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அவற்றை கடலூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் நேற்று சமன்படுத்தப்பட்ட பெரும்பான்மையான நிலங்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த நிலங்கள் 2006&ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டவை என்று என்.எல்.சி தரப்பில் கூறப்படுகிறது. அது உண்மை தான் என்றாலும் கூட, அவற்றுக்கு அப்போது அறிவிக்கப்பட்ட விலையான ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு கூடுதலாக அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை. அத்தொகையை வழங்காமலேயே ஏழை, நடுத்தர உழவர்களின் நிலங்களைப் பறிப்பது அதிகார அத்துமீறலின் உச்சமாகும்.

வளையமாதேவி பகுதியில் சமன்படுத்தப்பட்ட நிலங்களில் என்.எல்.சி இப்போதைக்கு சுரங்கம் அமைக்கப் போவதில்லை. அந்த பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைக்க குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் ஆகக் கூடும். அந்த அளவுக்கு என்.எல்.சி நிறுவனத்திடம் உபரி நிலங்கள் உள்ளன. ஆனால், 15 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை கட்டுப்பாட்டில் எடுத்தால் கூடுதலாக விலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையை குவித்து நிலங்களை என்.எல்.சி நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் பறித்திருக்கின்றன.

anbumani

பரவனாறு வெள்ளத்தடுப்பு பணிகளுக்காகவே நிலங்கள் எடுக்கப்பட்டு சமன்படுத்தப்பட்டன என்றும் தமிழக அரசின் சார்பில் இன்னொரு காரணம் கூறப்படுகிறது. இது அப்பட்டமான பொய் ஆகும். பரவனாறு வெள்ளத்தடுப்புக் கால்வாய் அமைப்பதற்காக மிகக்குறைந்த நிலமே தேவைப்படும். ஆனால், அதற்கு தேவையான நிலங்களை விட பல மடங்கு நிலங்களை, தங்களின் கட்டுப்பாட்டில் எடுப்பதாகக் கூறி அவற்றில் கால்வாய் வெட்டியும், பள்ளம் தோண்டியும் என்.எல்.சி நிறுவனம் பாழ்படுத்தியிருக்கிறது. அவ்வாறு செய்ததற்கான காரணம்…. சம்பந்தப்பட்ட நிலங்களை உழவர்கள் பயன்படுத்திவிடக் கூடாது என்ற தீய எண்ணம்தான். இத்தகைய செயல்களின் மூலம் உழவர்களை பணிய வைத்து விட முடியும் என்று என்.எல்.சி நிறுவனம் கருதினால், அது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போவது உறுதியாகும்.

உழவர்களையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்.எல்.சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டுவதற்காகத் தான் நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இது என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொதுமக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும்.

எனவே, நாளைய முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அது தான் அப்பாவி உழவர்களின் விளைநிலங்களை அடக்குமுறையை ஏவி பறிக்கும் என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு முடிவு கட்டும். அதற்காக நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளுக்கும், 12&ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை போராட்டக்குழு உறுதி செய்யும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ