சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் பொருட்கள், கொடிகள், வாகனங்கள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் தொகுதியில் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், வாகனங்கள், உணவு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான தினசரி வாடகை மற்றும் செலவுகளுக்கும் தனித்தனியாக விலை நிர்ணயம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பிளாஸ்டிக் இருக்கை ஒன்றின் விலை ரூ.11 ஆகவும், 2×2 அடி மேஜைக்கு ரூ.110, குஷன் இருக்கைக்கு ரூ.165, தனி சோபாவுக்கு ரூ.380 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடிகள், அலங்காரங்கள் போன்றவற்றுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 50 கொடிகளுக்கான விலை ரூ.40 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சார நிகழ்ச்சிகளில் இடம்பெறும் கலாச்சார அம்சங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேளதாளங்கள் வாசிப்பதற்கு 4 மணி நேரத்திற்கு ரூ.6,500, குதிரைகள் பயன்படுத்தினால் அதே நேரத்திற்கு ரூ.6,000, கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 3 மணி நேரத்திற்கு ரூ.11,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறிய தண்ணீர் பாட்டில் ரூ.7, வெஜிட்டபிள் மற்றும் வெரைட்டி ரைஸ் ரூ.50, ஸ்னாக்ஸ் (ட்ரை ஃப்ரூட்ஸ் இல்லாமல்) 100 கிராம் ரூ.30, ஸ்வீட்ஸ் ரூ.50 முதல் ரூ.90 வரை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வாகன பயன்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெம்போ டிராவலர் 15 மணி நேரம் அல்லது 150 கி.மீ.க்கு ரூ.6,700, Non-AC கார் ரூ.4,950, AC கார் ரூ.3,400, இன்னோவா போன்ற வாகனங்களுக்கு ரூ.5,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செலவினங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் அரசு இயந்திரம் பயன்படுத்த தடை – அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
