20 மாத கால திமுக ஆட்சியில் நடந்துள்ள வரலாறு சிறப்புமிக்க சாதனைகளால் ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றி கிடைக்கும் என மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடவில்லை. இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். வேட்பாளரை அறிவிக்கும் முன்பே கை சின்னத்துக்காக வாக்கு சேகரிக்க தொடங்கிய அமைச்சர்கள் நேரு, முத்துசாமிக்கு நன்றி. அதிமுக பிரிந்து நின்றாலும், சேர்ந்து நின்றாலும் நிச்சயம் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார். திமுகவினர் களப்பணியை தொடங்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
20 மாத கால திமுக ஆட்சியில் நடந்துள்ள வரலாறு சிறப்புமிக்க சாதனைகளால் ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றி கிடைக்கும், காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
