மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமையை விமர்சித்த துரை வைகோவுக்கு கே.என்.நேரு அளித்த பதிலடிக்கு, தற்போது திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து துரை வைகோ கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.
கட்சி மாறியவர்கள் மற்றும் பின்னணி சதி
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ, தங்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், “எங்கள் கட்சியில் இருந்து சில பேர் வெளியேறியுள்ளனர். அறிவாலயத்தின் கழிவுறையில் இருந்து வருகிற அந்த சாக்கடையில் முத்து குளிப்பவர்கள் இவர்கள். இவர்களை வைத்து யூடியூப் சேனல்களில் எங்கள் குடும்பத்தைப் பற்றி அவ்வளவு கேவலமாகப் பேசுகிறார்கள். இதற்கு பின்னாடி இருப்பது யார்? திமுகவில் இருக்கிற சில ஆளுமைகள்தான் பின்னாடி இருந்து இயக்கி வருகின்றனர். நாங்கள் அந்த கூட்டணியில் இருக்கும் போது கூட ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் என்னை தனி மனிதத் தாக்குதல் செய்து இழிவான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்பினார்கள். அதன் பிறகுதான் இவர்கள் பின்னாடியில் இருக்கிறார்கள் என்பதே எங்களுக்குத் தெரியவந்தது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டேன்
தொடர்ந்து பேசிய அவர், தன் மீது தொடரப்படும் அவதூறுகளும் மிரட்டல்களும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “இப்போது அதே வேலையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படுகிறவன் நான் கிடையாது; அந்த அரசியலும் எனக்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் செய்து என்னை மிரட்டலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது, யாரும் என்னை மிரட்ட முடியாது” என்று மிகுந்த ஆவேசத்துடன் துரை வைகோ பேட்டியளித்தார். இரு கட்சிகளுக்குள் முற்றியுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
