தமிழகத்தில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் எம்பிக்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசியிருப்பதாவது, அந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அகில இந்திய பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றக் கட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழ்நாடு வருகை குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறினார்.
தேர்தல் பரப்புரை, மாநாடுகள், கிராம கமிட்டிகளை தமிழ்நாடு முழுவதும் அமைப்பது, தேர்தல் உத்திகள் போன்றவை குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார். மேலும், இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை எவ்வாறு வெற்றி பெற வைப்பது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் நடைபெற இருந்த மற்றொரு கூட்டம் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் அல்லது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அகில இந்திய தலைவர்களுடன் தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். அந்த கூட்டம் அநேகமாக 25ஆம் தேதிக்கு பிறகு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் மாற்றம் வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்தப்பட்டதா? தொண்டர்கள் அப்படி கோரிக்கை விடுத்தார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த செல்வப் பெருந்தகை, “அந்த மாதிரி யாரும் சொல்லவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஐந்து நபர் குழுவை நியமித்திருக்கிறார். அந்த குழு திமுக தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எந்த சந்தேகமும் வேண்டாம். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது” என்றார்.
கூட்டணியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “அப்படி எதுவும் இல்லை. மாற்றம் இருந்தால் பேச்சுவார்த்தையே தொடங்கியிருக்க மாட்டோம். இந்தியா கூட்டணி முழுமையான புரிதலோடு செயல்படுகிறது” என்று உறுதிபடக் கூறினார்.
த.வெ.க.வுடன் கூட்டணி என்ற தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “அதை யார் சொன்னது? சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்” என அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும் செல்வப் பெருந்தகை கூறினார். “இதில் எந்த சச்சரவும், பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை” என அவர் உறுதியளித்தார்.
“தி.மு.க கொடுக்கும் இடங்களை வாய் மூடி வாங்கிக் கொள்வீர்களா?” என்ற கேள்விக்கு, “இதை கேமரா, மைக் முன்னாடி சொன்னால், நீங்களும் கேமராவும் வாங்கித் தரப் போகிறீர்களா?” என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
தமிழகத்தில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்தார்.
“ஐந்து முனை, ஆறு முனை போட்டிகள் கூட வரலாம். இந்தியா கூட்டணி 45 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்கு வங்கியுடன் வலிமையாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட அதிக வாக்கு சதவீதத்துடன் வெற்றி பெறுவோம்” என்றார்.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தகுதி உள்ளவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும், தகுதியற்றவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதே தங்களின் தாரக மந்திரம் என்றும் அவர் கூறினார்.
“தகுதியான வாக்காளர்கள் தவறாக நீக்கப்பட்டிருந்தால், அவர்களுக்காக போராடி வாக்குரிமையை பெற்றுத் தருவோம்” என்றும் உறுதி அளித்தார்.
மொத்தத்தில், இந்தியா கூட்டணி “எஃகு கோட்டை போல வலிமையாக உள்ளது” என்றும், தற்போதைய ஆட்சியும் அதிகாரமும் இந்தியா கூட்டணியிடமே தொடரும் என்றும் செல்வப் பெருந்தகை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.


