இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவிற்கு தான் என் ஆதரவு என தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தப்படி அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இடைத்தேர்தலில் த.மா.க போட்டியிட விருப்பம் இல்லை என அக்கட்சியின் தலைவர் ஜி. கே.வாசன் அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு அதிமுக சார்பில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக-வானது ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என இரு பிரிவுகளாக பிரிந்து உள்ளது.கூட்டணி கட்சிகளிடம் ஓபிஎஸ் தரப்பினர் ஒருபக்கம் ஈபிஎஸ் தரப்பினர் ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்து ஆதரவு கோரினர். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான்பாண்டியன், “இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் வேட்பாளருக்கே எங்களது ஆதரவு. இரட்டை இலை சின்னம் வைத்திருப்பவர்களை ஆதரிப்பதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தெளிவாக உள்ளது. பழனிசாமி, பன்னீர்செல்வம் ஒன்றுபட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இன்று மாலை என்னை சந்திக்க வரும் ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்துவேன்” என தெரிவித்தார்.
