Homeசெய்திகள்அரசியல்மாணவ - மாணவிகளுக்கான கலைத் திருவிழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாணவ – மாணவிகளுக்கான கலைத் திருவிழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

அரசு பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது கலைத் திருவிழா நிகழ்வுகளின் வெற்றி வாயிலாக தெளிவாகிறது. கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு நேரில் வந்து பரிசளிக்க இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் கலைத் திருவிழாவை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் கலைத் திருவிழா என்றும் அதில் இதுவரை காணாத அளவிற்கு நம் மாணவ செல்வங்கள் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

பள்ளி மாணவர்களை பாராட்டி காணொளி வெளியிட்டார்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் இல்லாது பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டியது மிக மிக அவசியம். உங்களை மொழித்திறன், ஆடல், பாடல், இசை, ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலைகள், செவ்வியல் கலைகள் என அனைத்திலும் நம் மாணவர்களின் திறன் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கே அரங்கேறும் வாய்ப்பு இதற்கு முன்பு இருந்ததில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த கலைத் திருவிழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன். 200 வகைகளுக்கும் மேற்பட்ட போட்டிகளில் ஏறத்தாழ 16 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஹிமாலய சாதனை புரிந்திருக்கிறீர்கள். இதில் பங்கேற்ற மொழித்திறன், நாடகம், ஓவியம் போன்ற போட்டிகளுக்கு தரப்பட்டுள்ள தலைப்புகள் சமூகநீதியை பிரதிபலிப்பதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளதை கண்டு உளமாற மகிழ்ச்சி அடைகிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் வாயிலாக உங்கள் திறமைகள் வளரும். சக மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும், வாழ்வின் மீதும் பற்று உருவாக்குவதுடன் ஆரோக்கியமான போட்டியும் ஏற்படும். அரசு பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது இந்த நிகழ்வுகளின் வெற்றி வாயிலாக தெரிந்திருக்கிறது.

நம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகளை தொடர்ச்சியாக உருவாக்கவும், மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், அதை தொடர்ந்து வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பும் காத்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு நான் நேரில் வந்து பரிசளிக்க இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலை திருவிழா நிகழ்வுகளை சிறப்பான முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் பள்ளி கல்வித்துறைக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை நன்றி”, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ