காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதி ஒதுக்க முடியும் என்றால் எங்களுக்கும் அதிக தொகுதி ஒதுக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
திமுக கூறிய தொகுதி எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், முன்பு வலியுறுத்தப்பட்ட இரட்டை இலக்க தொகுதி கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டதாகவும், இதுகுறித்து திமுகவுடன் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ், மூஸ்லீம் லீக் மற்றும் மமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
அடுத்த கட்டமாக சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
மேலும், சிறிய கட்சிகளான மக்கள் நீதி மய்யம், ஆதித் தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை போன்ற அமைப்புகளுடன் திமுக தனது பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.
இந்த சூழலில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையிலான குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கை தங்களுக்குச் சரியாகத் தோன்றவில்லை என்றும், கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து திமுக உயர்நிலை தலைமையுடன் ஆலோசித்து மீண்டும் பேசலாம் என்று அவர்கள் தெரிவித்ததாகவும், அதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடரும் என்றும் கூறினார். கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் இந்த நிலை ஏற்பட்டதாக திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது என்றும், அந்த காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே கடந்த தேர்தலில் கிடைத்ததை விட அதிக தொகுதிகளில் போட்டியிடும் வகையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஎம் முன்வைத்துள்ளதாக பெ. சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் ஆலோசனை நடத்த நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக சிபிஎம் தரப்பில் இரட்டை இலக்க தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த தேர்தலில் சிபிஎமுக்கு வழங்கப்பட்ட 6 தொகுதிகளையே மீண்டும் திமுக தரப்பு முன்மொழிந்திருக்கலாம் என்ற அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
யாருக்கு எத்தனை தொகுதிகள்? திமுக கூட்டணி கணக்கு என்ன? ப்ரியன் நேர்காணல்!
