வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்,” என என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் இன்று Zoom வழியாக நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்காக 60 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்களிடம் கூட்டணி அமைப்பது தொடர்பாக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கருத்து கேட்டார்.
இதற்கு பதிலளித்த மாவட்ட செயலாளர்கள், கூட்டணி அமைத்தாலும் அல்லது தனியாக தேர்தலை சந்தித்தாலும் கட்சித் தலைமையகம் எடுக்கும் எந்த முடிவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படத் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், “எந்தக் கட்சி கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் கட்சி தொடங்கப்படவில்லை. தனியாகவே தேர்தலை சந்தித்தாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்,” என என். ஆனந்த் அறிவுறுத்தினார்.
அதேபோல், சமீபத்தில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களைத் தவிர, மற்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்களை விரைவாகத் தேர்வு செய்து தலைமையகத்துக்கு தெரிவிக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஏற்கனவே ஒவ்வொரு தொகுதியுக்கும் 2 முதல் 3 பேர் வரை பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் இருந்து இறுதி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விரைவுபடுத்துமாறும் கூறப்பட்டது.
மேலும், தலைமையகம் பரிந்துரைக்கும் வேட்பாளர்களே நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் கட்சியின் தேர்தல் முன்னேற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
