தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும் விளம்பரக் கட்சிதான் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளாா்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளாா்.

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும் விளம்பரக் கட்சிதான் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளாளா். விஜய் குறித்து ஆரம்பம் முதலே தாம் விமர்சித்து வருவதாகவும், அவர் அமித்ஷாவின் “ஸ்லீப்பர் செல்” போல செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், அவர் பாஜகவின் ஏ டீம்மோ, பி டீம்மோ அல்ல, “சி டீம்” எனவும் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜயை திமுக ஒரு அரசியல் சக்தியாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பேசுகையில், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளாா். குற்றவாளிகளை அரசு ஒருபோதும் காப்பாற்றவில்லை என்றும், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளாா்.
மேலும், அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில், திமுக அரசு வழங்கும் திட்டங்களை “இலவசம்” என்று கூறுவது தவறு. அவை மக்களின் “உரிமைத் தொகைகள்” என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளாா். குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.
காவல்துறை பணிகள் குறித்து அவர் கூறுகையில், போலீசார் தங்களது கடமைகளை முறையாக செய்து வருகின்றனர். சில தனிப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் முழு காவல்துறையையும் குற்றம் சாட்ட முடியாது என்றும், கடந்த கால ஆட்சியில் நடந்தது போல போலீஸ் வன்முறை தற்போது இல்லை என்றார்.
மேலும், மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு போராட்டங்களை அமைதியாக முடிவுக்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளாா்.
