என்.கே.மூர்த்தி
தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவோ, அதில் உள்ள நிர்வாகிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள் என்றோ கருத முடியவில்லை.


தவெகவின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் ஒரு தவறான வளையத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டார். அவரிடம் குடும்பப் பிரச்சனை குறித்தும், கட்சியில் நடைபெறுகின்ற குளறுபடிகள் குறித்தும் பேசமுடியவில்லை. அவர் தவறான கும்பலிடம் சிக்கிக் கொண்டு இருக்கிறார். அதை புரிந்துக்கொண்டு அதிலிருந்து வெளியே வந்தால் தான் அவருக்கு வெற்றி சாத்தியம் என்று கூறியிருக்கிறார்.
தவெகவில் உள்ள நிர்வாகிகளை நினைக்கும்போது ஒரு கதை சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது.
ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். மாணவர்களிடம் கம்பராமாயணம் கதையை சொல்லி கொடுத்துக் கொண்டு இருந்தார். பெரும்பாலான மாணவர்கள் அரை தூக்கத்திற்கு சென்றுவிட்டார்கள்.
அந்த நேரத்தில் கல்வித்துறையின் இன்ஸ்பெக்டர் வகுப்பறைக்குள் நுழைந்தார். வகுப்பறை பரபரப்படைந்தது. ஆசிரியரிடம் என்ன பாடம் நடத்துகிறீர்கள் என்று கேட்டார். ராமாயணம் நடத்துவதாக பதில் தெரிவித்தார். நல்லது, நீங்கள் நடத்திய பாடத்தில் இருந்து மாணவர்களிடம் கேள்வி கேட்க போகிறேன் என்று கூறினார். தாராளமாக கேளுங்கள் என்று ஆசிரியர் பதிலளித்தார்.
“ஜனகரின் வில்லை உடைத்தது யார்? என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். வகுப்பறை அப்படியே அமைதியானது.
சிறிது நேரம் கழித்து ஒரு மாணவன் எழுந்து, என்னை மன்னித்து விடுங்கள் அய்யா, நான் அந்த வில்லை ஒடிக்கவில்லை, ஒரு வாரமா பள்ளிக்கே வரவில்லை. யார் ஒடித்தார்கள் என்று எனக்கு தெரியாது. இதை ஏன் நான் முன்பே தெளிவுபடுத்துகிறேன் என்றால், இந்த பள்ளியில் எது நடந்தாலும் என் மேல்தான் பழியை போடுவார்கள். அதனால்தான் நானே தெளிவுபடுத்துகிறேன்” என்றான்.
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டருக்கு ஆகாயத்தில் இருந்து இடி விழுந்ததைபோல் இருந்தது. அவர் திரும்பி ஆசிரியரைப் பார்த்தார்.
ஆசிரியர் உடனே பிரம்பை தூக்கி இந்த ராஸ்கல் தான் செய்திருப்பான், எல்லோரை விடவும் மிகவும் மோசமானவன் இவன்தான், என்று இன்ஸ்பெக்டரிடம் கூறிவிட்டு அந்தப் பையனை நோக்கி, நீ அதை செய்யவில்லையென்று ஏன் கூறினாய்? என்று கேட்டார். மீண்டும் இன்ஸ்பெக்டரிடம் திரும்பி, ” சார், இவனுடைய இனிமையான பேச்சைக் கேட்டு இவனை விட்டு விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.
செய்வதறியாமல் திகைத்துபோன இன்ஸ்பெக்டர், மெதுவாக எழுந்து, கோபத்துடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று வகுப்பறையில் நடந்த சம்பவத்தை விவரித்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய ஆவலாக இருந்தார்.
தலைமை ஆசிரியரோ இந்த விஷயத்தை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டுக்கொண்டார். இந்த காலகட்டத்தில் மாணவர்களை ஏதாவது தவறாக சொல்வது மிகவும் ஆபத்தானது. அதனால் யார் எதை உடைத்திருந்தாலும் பரவாயில்லை. அதை அப்படியே விட்டுவிடுங்கள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் பள்ளி நல்லமுறையில் நடந்து வருகிறது என்று இன்ஸ்பெக்டரை அமைதிப்படுத்தினார்.
இதைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி அடைந்தார். அவர் நேராக பள்ளிக் கமிட்டியின் தலைவரை சந்தித்து, வகுப்பறையில் ராமாயணம் பாடம் நடத்தப்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு மாணவன் எழுந்து, நான் ஜனகரின் வில்லை ஒடிக்கவில்லை என்று கூறியதையும், அதற்கு அந்த வகுப்பாசிரியர், அந்த பையன் தான் குற்றவாளி என்று கூறியதையும், அதை தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையும், அதன்பிறகு தலைமை ஆசிரியர் அந்த விஷியத்தை அப்படியே விட்டுவிட சொன்னதையும் ஒன்று விடாமல் கூறினார். இது குறித்து தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று கேட்டார்.
அதற்கு பள்ளி கமிட்டியின் தலைவர், தலைமை ஆசிரியர் மிகவும் புத்திசாலியானவர். மேலும் அந்த குற்றவாளியைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். யார் அந்த வில்லை உடைத்திருந்தாலும் கமிட்டி அதை ரிப்பேர் செய்து கொடுத்து விடும். யார் உடைத்தார்கள் என்று ஆராய்ந்து கண்டுப்பிடிப்பதை விட ரிப்பேர் செய்து கொடுத்து விடுவது நல்ல முடிவு என்று இன்ஸ்பெக்டரிடம் தலைவர் கூறினார். இதில் வெறுப்படைந்த இன்ஸ்பெக்டர், அய்யோ என்று கத்தி அலறினார், தனக்குத் தானே ஒரு பைத்தியம் போல் சிரித்துக் கொண்டார்.
இந்த கதையில் வரும் மாணவன், ஆசிரியர், தலைமை ஆசிரியர், பள்ளி கமிட்டி தலைவர் என்று எல்லோரும் தவெக கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் எல்லோருடனும் அப்படியே பொருந்துகிறார்கள்.
விஜய் கலந்துகொண்ட கூட்டங்களில் இதுவரை 56 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதற்கு ஒரு பொழுதும் விஜய் பொறுப்பேற்க மாட்டார். சிறிதும் கூச்சப்படாமல் பழியை திமுக மீது போடுகிறார்கள். அந்த 56 குடும்பம் என்ன பாடுபடும். அதைப்பற்றி சிறிய அளவில் கூட விஜய் வருந்தியதாக தெரியவில்லை.
தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி சங்கீதா தனிமையில் இருக்கிறார். பெற்ற பிள்ளைகள் ஆளுக்கொரு திசையில் வாழ்கிறார்கள், பெற்ற தாய் தந்தை தனியாக தவிக்கிறார்கள். இதை எல்லாம் விஜய் புரிந்து கொண்டு இருக்கிறாரா? தன் குடும்பத்தை அனாதையாக்கிவிட்டு , கட்சி தொண்டர்களை காவு கொடுத்துவிட்டு ஒரு மனிதனால் எப்படி நிம்மதியாக வாழ முடியும். அது விஜய்யால் மட்டுமே முடியும். விஜய்யை ஏற்றுக் கொண்ட, எந்த அறிவும் இல்லாத தற்குரி கூட்டாத்தால் மட்டுமே முடியும்.
ஆபத்தை உணராத தவெக தொண்டர்கள்… பிடுங்கி வீசப்பட்ட தடுப்புகள்… தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்…


