தமிழ்நாட்டில் தவெக அரசின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
ரீல்ஸுக்காக படுத்து ஆய்வு செய்த அமைச்சர்:
“தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் ரீல்ஸ் எடுப்பதற்கு ஆய்வு என்ற பெயரிலே அடிக்கிற அட்ராசிட்டிகள் மற்றும் கூத்துகளால் தமிழகம் தலை தாழ்ந்து நிற்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் சமணர் படுகையில் போய் படுத்து ஆய்வு செய்துள்ளார். இந்தியாவிலேயே படுத்து ஆய்வு செய்த ஒரே அமைச்சர் ராஜ்மோகன்தான். ஏனெனில், ரீல்ஸுக்காக ஆய்வு செய்த இப்படி ஒரு காட்சியை இதுவரை யாரும் பார்த்ததில்லை.”
கீழடியில் ட்ரோன் விதிமீறல்:
“தமிழர்களின் தாய் மடியான கீழடியிலே, அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்ததை ரீல்ஸ் போடுவதற்காக தவெகவினர் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். அதனை அமைச்சர் தடுக்கவில்லை. ட்ரோன் பறக்க அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடை இருந்தும் தவெகவினரை அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை.”
அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சர்ச்சை:
“பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தொழில்துறை அமைச்சரும் வெளிநாட்டிற்குச் சென்ற போது டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டிலே சென்றார்களா? அல்லது ரெகுலர் பாஸ்போர்ட்டிலே சென்றார்களா? எனும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கான எந்த விளக்கமும் அரசு சார்பிலே இதுவரை வெளிவரவில்லை. அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு இப்படி அமைச்சர்கள் சென்று வருவது அப்பட்டமான விதிமீறல் ஆகும்.”
முதலமைச்சர் விஜய்யின் மௌனம் குறித்து கேள்வி:
“ஒருபுறத்திலே அமைச்சர் போதை பொருள் பயன்படுத்துகிற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. நாடெல்லாம் தவெகவினர் ரீல்ஸ் பயன்படுத்துவதிலே சர்ச்சை நீடிக்கிறது. பழனி கோயில் இடம் கொள்ளையடிக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி தமிழ்நாட்டில் எந்த ஒரு சர்ச்சை வெடித்தாலும், அதற்கு முதலமைச்சர் விஜய் எந்தவொரு விளக்கமோ, கருத்தோ அல்லது அறிக்கையோ தருவதில்லை” என்று ஆர்.பி. உதயகுமார் தனது வீடியோ பதிவில் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
