கமல்ஹாசனுக்காக கூடிய கூட்டம் ஓட்டாக மாறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கள்ளுக்கடைமேடு பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சாலையோர மர நிழலில் மக்களை அமர வைத்து அவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர், பள்ளி ஆசிரியர் போல் கரும்பலகையில் விலைவாசி உயர்வை எழுதி கையில் குச்சியுடன் அதனை மக்களுக்கு விளக்கினார்.
தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய செல்லூர் ராஜூ, “நகைச்சுவை நடிகர் வடிவேலு போன்றோருக்கு கூட்டம் கூடும் ஆனால் ஓட்டு கிடைக்காது. அதுபோலதான் கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடும். ஆனால் ஓட்டுப்போட மாட்டார்கள். ஈரோடு மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். கமல்ஹாசனை பார்க்கத்தான் கூட்டம் கூடியது. அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. இடைத்தேர்தலில் பெரிய மாற்றம் வரப்போகிறதா? கமல் ஏதாவது பேச வேண்டும் என்பதால் பேசுகிறார். கமல் ஹாசன் பணத்துக்காக பிரச்சாரம் செய்ய கால் சீட் கொடுத்திருப்பார். திரைப்படத்தில் கொடுப்பதைவிட அதிக பணம் கொடுப்பதாக கூறியிருப்பர். அதனால் தான் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார்” எனக் கூறினார்.
