நிச்சயமாக கூட்டணி மந்திரிசபை அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளது,மாற்றங்கள் நிச்சயமாக நடைபெறும், தேமுதிக அங்கம் வகிக்கும் கட்சிதான் 2026 இல் ஆட்சியை பிடிக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டியளித்துள்ளாா். 
2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளோடு புத்தாண்டை கொண்டாடினார். கேப்டன் நினைவிடத்தில் புத்தாண்டையொட்டி வழிபட்ட பிரேமலதா பின் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார், தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்த பொது மக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “2026 புத்தாண்டு நல்வாழ்த்துகளை தேமுதிக சார்பாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். வரவுள்ள புத்தாண்டு தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் மகத்தான வெற்றி ஆண்டாக இருக்க வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநாடு மிகப்பிரமாண்டமான மாநாடாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கேப்டனின் கனவு இலட்சியத்தை, வென்றெடுக்கும் மாநாடாக கடலூரில் மாநாடு அமைய உள்ளது. மாநாட்டுக்கான பணிகள் 50% நிறைவடைந்தது.மாவட்ட செயலாளர்களோடு ஆலோசித்து மாநாட்டில் நல்ல முடிவை அறிவிக்க உள்ளோம். அமித்ஷா வருவதற்காக எந்த அழைப்பும் எங்களுக்கு விடுக்கவில்லை.
இதுவரை அதிகாரப்பூர்வமாக யாரும் எங்களிடம் பேசவும் இல்லை, அழைக்கவும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிக்கியுள்ளார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
திருவள்ளூரில் நான்கு சிறார்கள் சேர்ந்து வட மாநில இளைஞரை வெட்டுகிறார்கள். போதையில் அடிமையானவர்கள் தங்களின் நிலையை மறந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாடு அரசும், அண்ணன் ஸ்டாலினும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக ஸ்ட்ராங்கான முடிவு எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.
மேலும், எதிர்கால மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எதிர்கால தமிழ்நாட்டை நல்ல தமிழ்நாடாக உருவாக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகராட்சி ஸ்தம்பிக்கும் அளவிற்கு எல்லா இடங்களிலும் ஆர்பாட்டம், போராட்டம் நடைபெறுகிறது. போராடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து உறுதியாக நிறைவேற்ற வேண்டும்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என கேப்டன் கூறுவார் அதுதான் எங்களின் கோஷமும். ஒரு மாற்றம் வந்து தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் நிச்சயம் அதை தேமுதிக வரவேற்போம். நிச்சயமாக கூட்டணி மந்திரிசபை அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளது,மாற்றங்கள் நிச்சயமாக நடைபெறும், நடைபெறும் மாற்றங்கள் தமிழக மக்களுக்கு பயனளிக்க உள்ளதாக இருக்கும். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும் என பிரேமலதா தெரிவித்தார்.


