ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.


அப்போது பேசிய திருமாவளவன், “மோசமான மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்றால் இன்றைக்கு காங்கிரசும் திமுகவும் அங்கம் வகிக்கக்கூடிய அணி வலிமை பெற்றாக வேண்டும். இந்தியாவிலேயே திமுக தலைமையில் தான், இப்படி ஒரு மெகா கூட்டணி உருவாகி இருக்கிறது. அண்டை மாநிலங்களில் கூட இல்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆற்றமிக்க தலைவராக இருப்பதால்தான், இந்தியா முழுவதும் ஒரு கூட்டணி அமைந்தால் மோடியை 2024ல் தூக்கி எறிந்து விட முடியும், ஆட்சி கட்டிலிலிருந்து அப்புறப்படுத்திய விட முடியும். அதற்கு அச்சாரமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் வென்றாக வேண்டும்.
கிராமம் கிராமமாக ஊடுருவிகிறார்கள், அவர்களால் இந்த தேர்தலில் நிற்க முடிந்ததா அந்த கூட்டணி இன்று எங்கே இருக்கிறது என்று தெரியாமல் சிதறி போனது. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை பயன்படுத்தி அந்த அதிமுகவின் தோளில் ஏறி பாஜக ஊடுருகிறது. அவர்களை வளர்த்துக் கொள்வதற்கு அதிமுகவை பயன்படுத்துகிறார்கள். அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பிஜேபிக்கு வாக்களிப்பதாக பொருள். அதிமுக வெற்றி பெறுகிறது என்றால் பாஜக வெற்றி பெறுகிறது என்று பொருள். ஏனென்றால் எம்ஜிஆர் காலத்தில் இருந்ததைப் போல அதிமுக தொடர்ச்சியாக வலுவாக இயங்க முடியாது.
ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போல அதிமுக திமுகவுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு எதிர்த்து எதிர்க்கட்சியாக இயங்கக் கூடிய அளவுக்கு அவர்களால் இயங்க முடியாத நிலை உள்ளது. இன்று அவர்களுக்குள் யார் தலைவர் என்பதே பிரச்சினையாக இருக்கிறது. நான்கு அணிகளாக சிதறி போய் உள்ளது. அதிமுக கூட்டணியே இப்போது இல்லை. பாஜக எங்கேயோ போய்விட்டது. பாமக கழண்டு கொண்டது. அதில் இடம்பெற்ற ஒரு கட்சி கூட இன்றைக்கு இல்லை. சிதறி போனார்கள், ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்றாலும் கூட அவரை எதிர்த்து நின்று போட்டியிட கூடியவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள், மண்ணுக்கு எதிரானவர்கள், மொழிக்கு எதிரானவர்கள். பாசிச சக்திகளுக்கு துணை போகக் கூடியவர்கள் சனாதன சக்திகளுக்கு துணை போகக் கூடியவர்கள். ஆகவே அவர்களை வீழ்த்த வேண்டும். ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்டவர்கள் யாரும் டெபாசிட் வாங்கவில்லை என்ற அளவில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.” என பேசினார்.
