தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக அஇஅதிமுக முன்னெடுத்திருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முன்னணித் தலைவர்களான எஸ்பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி ஆகியோர் பங்கேற்காமல் தவிர்த்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ரகசியச் சந்திப்பும் தலைவர்களின் முடிவும்
விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, ஆகஸ்ட் 13-ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்த எஸ்பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சியின் கோரிக்கைகளை மட்டும் ஆதரிப்பதாகத் தெரிவித்தது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி ஆகியோர் சுமார் ஐந்து மணி நேரம் தீவிர ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பு அதிமுகவின் தற்போதைய உட்கட்சி முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்ததன் பின்னணி என்ன?
இந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காததற்கு “மாவட்டங்கள் மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டதே காரணம்” என்று தரப்பில் கூறப்பட்டாலும், அது உண்மையான காரணமாக இருக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், “பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் செயல்படுவதில் உள்ள தயக்கமும், தங்களுக்கு விருப்பமான கட்சிப் பதவிகள் வழங்கப்படாததால் ஏற்பட்டுள்ள அதிருப்தியுமே இந்த புறக்கணிப்பு முடிவுக்கு முக்கியக் காரணமாகும். ஏற்கனவே சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இக்கட்டான சூழலில் இருந்த இவர்கள், தற்போது ஆர்ப்பாட்டத்தையும் தவிர்த்திருப்பதன் மூலம் தங்களை ஒரு ‘தனி அணியாக’ அடையாளப்படுத்த முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.”


அதிமுகவின் எதிர்க்கட்சி அரசியல் கேள்விக்குறி?
எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளும் தவெக அரசுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் வேளையில், கட்சியின் மூத்த தலைவர்களே அதைப் புறக்கணிப்பது, அதிமுகவின் எதிர்க்கட்சி அரசியலை நீர்த்துப் போகச் செய்யும் செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும், சி.வி. சண்முகம் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைச் சந்திப்பில், சட்ட ரீதியாகத் தற்போதைய கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பது குறித்தும், தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிகாரப் போட்டி நீடித்து வருவதால், தவெக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும், இது ஆளுங்கட்சிக்கே சாதகமாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சட்டப்பேரவையில் தவெக வை ஆதரிக்கும் எ.வா.வேலு! கடும் கொதிப்பில் அறிவாலையம்!
