இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.


இங்கிலாந்து – ஆஸ்திரோலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய இங்கிலாந்து 286 ரன்கள் எடுத்தது. 85 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 349 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 170 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் டங் 4 விக்கெட்டுகளும், கார்ஸே 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். பின்னர் 435 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய 5ஆம் நாள் ஆட்டத்தின்போது 352 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து. இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 85 ரன்களும், ஜேமி ஸ்மித் 60 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் சதம் விளாசியதுடன், 2வது இன்னிங்சில் அரை சதம் அடைத்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


