புஷ்பாவின் முதல் பாகத்தின் ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு, விராட் கோலி, டேவிட் வார்னர் போன்ற பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் களத்தில் புஷ்பாவை போல தாடையை தடவி மேனரிஸங்களை செய்து வேடிக்கை காட்டினர். புஷ்பா-2 வெளியீட்டிற்குப் பிறகும் கிடிக்கெட்டில் இதேபோன்ற மேனரிஸத்தைக் காட்டியுள்ளார் இந்திய அணி வீரர் நிதிஷ்குமார் ரெட்டி.
டீம் இந்தியாவின் நிதீஷ் குமார் ரெட்டி இன்று புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் புஷ்பா கொண்டாட்டத்தை செய்தார்.
இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த நிதிஷ் ரெட்டி, தனது 50 ரன்களை எட்டினார். பின்னர் தனது பேட் மூலம் புஷ்பா மேனரிசத்தை செய்தார்.
ஒரு தெலுங்கு பையன், உலகளாவிய கிரிக்கெட்டில் ஜொலிக்கும்போது தெலுங்கு படமான புஷ்பா மேனரிசத்தை செய்தது ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் நிதீஷ் ரெட்டி சிறந்த இந்திய வீரர் என்பதை நிரூபித்து வருகிறார். பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.
மெல்போர்ன் டெஸ்டின் இரண்டாம் நாளில் இந்திய அணி 159 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது நாளின் தொடக்கமும் சிறப்பாக இல்லை. முதல் செஷனில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 191 ரன்களில் ரிஷப் பந்த் மோசமான ஷாட் ஆடி வெளியேறினார். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி, எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் தலைவணங்கப் போவதில்லை என்பதை தனது இன்னிங்ஸ் மூலம் காட்டினார்.
ரெட்டி முதலில் இந்தியாவை ஃபாலோ-ஆனில் இருந்து காப்பாற்றினார். பின்னர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பிறகு ‘புஷ்பா’ பட பாணியில் கொண்டாடப்பட்டது. அவரது இன்னிங்ஸ் மீண்டும் இந்தியா அணிக்கும் ரசிகர்களுக்கும் உயிர் கொடுத்துள்ளது.
6 விக்கெட்டுகள் சரிந்த பிறகு, நிதிஷ் குமார் ரெட்டி முதலில் ரவீந்திர ஜடேஜாவுடன் 31 ரன்கள் எடுத்தார். ஆனால் ஜடேஜா 17 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்து வீச்சில் பலியானார். இருந்தும் நிதீஷ் குமார் ரெட்டி விடவில்லை. வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து ரன்களை குவிக்கத் தொடங்கினார். சுந்தருடன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு சதமடித்து சாதனை படைத்தார்.
தேநீர் இடைவேளை வரை இருவரும் சேர்ந்து 195 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவில் 8வது விக்கெட்டுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் இது. இதற்கிடையில், நிதிஷின் 85 ரன்கள், சுந்தரின் 40 ரன்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது பிசிசிஐ. இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது.